இந்தியா

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்... 9 பேர் உயிரிழப்பு

Published On 2024-08-11 15:32 GMT   |   Update On 2024-08-11 15:32 GMT
  • கனமழையால் ஜெய்ஜோன் சோ நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வாடா இந்திய மாநிலங்கள் வெள்ளக்காடாக மிதக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பருவகாலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருமண நிகழ்விற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் வந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜெய்ஜோன் சோ நதியை கடக்கும் போது அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை கடக்க வேண்டாம் என்று கார் ஓட்டுநரிடம் உள்ளூர் மக்கள் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றை கடந்துள்ளனர்.

ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 2 பேரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரில் பயணித்த தீபக் பாட்டியா என்பவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளூர் மக்கள் அனுமதித்தனர்.

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News