இந்தியா

ஊறுகாய் தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ள காட்சி.

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

Published On 2023-07-03 05:14 GMT   |   Update On 2023-07-03 05:14 GMT
  • பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
  • சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

திருப்பதி:

ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது.

தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை.

ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர்.

ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.

அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர்.

இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன.

இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்

அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News