இந்தியா (National)

ரூ.25 லட்சம் ஏ.டி.எம் பணம் கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்- நாடகமாடிய ஊழியரின் குட்டு அம்பலம்

Published On 2024-10-21 09:48 GMT   |   Update On 2024-10-21 09:48 GMT
  • காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.
  • தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் (வயது 25). இவர் தனியார் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் கோழிக்கோடு அரிக்குளம் பகுதியில் சுகைல் காரில் பணத்துடன் சென்றபோது, பர்தா அணிந்த 2 பேர் வழிமறித்து தாக்கியதோடு ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சுகைலை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

முதலில் ரூ.25 லட்சம் பறிபோனதாக கூறிய அவர், பின்னர் ரூ.75 லட்சம் என்று கூறினார். பெரிய தொகை கொண்டு செல்லும் போது அவர் ஏன் துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகைல், திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகைல், அவனது கூட்டாளிகள் தாஹா மற்றும் யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிதின்ராஜ் கூறுகையில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்ப, ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகைல், சில காலமாகவே பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். தற்போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி முதலில் அவர் நாடகமாடினார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News