இந்தியா (National)

வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்

Published On 2024-10-25 03:26 GMT   |   Update On 2024-10-25 03:27 GMT
  • பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
  • பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

புதுடெல்லி:

கடந்த 2015-ம் ஆண்டு, அரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கிட்டால், இறந்தவரின் வயது 47 என்று கூறிய ஐகோர்ட்டு, இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, இறந்த நபரின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:-

2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94-வது பிரிவின்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ''ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல'' என்று கூறியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தகவலை தெரிவித்துள்ளது.

எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News