இந்தியா

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு?: ஆதித்ய தாக்கரே கேள்வி

Published On 2022-07-04 03:10 GMT   |   Update On 2022-07-04 03:10 GMT
  • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர்.
  • மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மும்பை :

மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இ்ந்தநிலையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது.

இதற்காக கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வருகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் வருவதற்காக தனிவழிபாதைகள் அமைக்கப்பட்டன. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

சபாநாயகர் தேர்தலில் வாக்குப்பதிவு நடத்துவதற்காக விதான் பவன் அருகில் உள்ள சொகுசு ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், தங்கியிருந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதீத பாதுகாப்பை சிவசேனா முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அஜ்மல் கசாப்புக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு போடப்படவில்லை. நீங்கள் ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? அங்கிருந்து யாராவது தப்பி ஓடிவிட போகிறார்களா? ஏன் இவ்வளவு பயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது உயிருடன் பிடிபட்டவர் ஆவார்.

Tags:    

Similar News