இந்தியா

காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்துக்கு எதிராக மற்றொரு மல்யுத்த வீராங்கனையை களமிறக்கிய ஆம் ஆத்மி

Published On 2024-09-11 11:54 GMT   |   Update On 2024-09-11 11:54 GMT
  • காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
  • காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தொடர்ந்து இன்று காலை வெளியான 2-வது கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்பின் மதியம் 3வது கட்டமாக 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தற்போது 21 வேட்பாளர்கள் கொண்ட 4 வது வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆம் ஆத்மி கட்சி 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 4 வது பட்டியலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவிதா தேவி என்ற பேயரில் அறியப்படும் கவிதா தலால் WWE உள்ளிட்டவற்றில் பங்கேற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். மேலும் ஜுலானா பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.

இதன்படி இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் ஒரே தொகுதியில் மோத உள்ளனர். இதுதவிர்த்து பாஜக சார்பில் ஜுலானா தொகுதியில் யோகேஷ் பைராகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். "நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்குக் கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வினேஷ் போகத் தெரிவித்தார். 

Tags:    

Similar News