சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்
- பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
- கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபட உள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.