வங்காளதேசத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் 205 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டனர்
- வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகருக்கு தினமும் இரண்டு சேவைகளையும் இயக்குகிறது.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று இரவு வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றடைந்தது. அங்கிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு இயக்கப்படும் 2 விமானங்களைத் தவிர, இந்திய குடிமக்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானங்களையும் இயக்கலாம் என்று தெரிகிறது.
இதேபோல் விஸ்தாரா, இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை மீண்டும் வங்காளதேசத்துக்கு இயக்க தொடங்கி உள்ளன.
விஸ்தாரா நிறுவனம் மும்பையில் இருந்து தினசரி விமானங்களையும், டெல்லியில் இருந்து டாக்காவிற்கு மூன்று வாராந்திர சேவைகளையும் இயக்குகிறது. இண்டிகோ நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு தினமும் ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகருக்கு தினமும் இரண்டு சேவைகளையும் இயக்குகிறது.