தம்பி மகனை எதிர்த்து போட்டியிடும் துணை முதல்வர் அஜித் பவார்.. பாரமதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
- பாரமதி தொகுதி பவார் குடும்பத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது
- நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும்
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
பாஜக, சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், 38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 23ஆம் தேதி வெளியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி தொகுதி பவார் குடும்பத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் அஜித் பவார் போட்டியிடுகிறார்.
அஜித் பவாருக்கு எதிராக பேரனை களம் இறக்கியுள்ளார் சரத் பவார். அஜித் பவாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவரது மகன் யுகேந்திர பவார். தற்போது பெரியப்பாவை எதிர்த்து யுகேந்திர பவார் பேட்டியிடுகிறார்.
இந்நிலையில் நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் மகாராஷ்டிர துணை முதல்வரும் , என்சிபி தலைவருமான அஜித் பவார், பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.