இந்தியா

தெலுங்கு தேசம் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 6 எம்.பி., 10 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு

Published On 2024-03-12 08:24 GMT   |   Update On 2024-03-12 08:24 GMT
  • தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
  • பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

Similar News