அம்பேத்கர் பிறந்தநாளை அரசியல் சாசனத்தை காக்கும் தினமாக கொண்டாட வேண்டும் - ஆம் ஆத்மி
- ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
- ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.