லடாக் விபத்தில் 9 வீரர்கள் பலி - அமித்ஷா, ராஜ்நாத் சிங் இரங்கல்
- லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தானர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லடாக்கில் நடந்த சாலை விபத்தில் எங்கள் வீரம்மிக்க வீரர்களை இழந்தோம். இந்த துக்க நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.