விஷமருந்திய சிவனைப் போல் வேதனை அடைந்தார் பிரதமர் மோடி - அமித் ஷா
- குஜராத் கலவரம் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி அடைந்த வேதனையை பார்த்தேன் என அமித் ஷா கூறியுள்ளார்.
- குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என கூறியது.
புதுடெல்லி:
அயோத்தியில் கரசேவையில் பங்கேற்றுவிட்டு கரசேவகர்கள் திரும்பியபோது 2002, பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் அவர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து குஜராத்தில் மூண்ட கலவரத்தில் 1,044 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை அப்போது குஜராத் முதல்மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தூண்டினார். அவர் கலவரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தக் கலவரங்களை நடத்தியதில் உயர்மட்ட சதி நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என 2012-ல் இறுதி அறிக்கை அளித்தது.
இதற்கிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சமீபத்தில் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என கூறியது.
இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு தீர்ப்புக்கு பின் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2022 குஜராத் கலவரத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி மிகுந்த வேதனை அடைந்ததை நான் பார்த்தேன். பிரதமர் மோடி பெரிய தலைவர். ஆனால் அவர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தற்போது உண்மை வெளிவந்துள்ளது.
பிரதமர் மோடி எவ்வாறு வலியை தாங்கிக்கொண்டார் என்பதை நான் பார்த்துள்ளேன். விஷமருந்திய சிவனைப் போல் வேதனை அடைந்தார் பிரதமர் மோடி. நீதித்துறை விசாரணைகள் நடைபெற்றபோது அவர் எதுவும் செய்யவில்லை. இந்த விவகாரத்தை சிலர் கொதிப்புடன் வைத்திருந்தனர். வழக்கு பா.ஜ.க.வின் பெயரை சரித்தது. ஆனால் அது தற்போது நீங்கப்பட்டுவிட்டது.
கலவரம் நடந்தபோது நடவடிக்கை எடுக்க குஜராத் அரசு காலம் தாழ்த்தவில்லை. ஆனால், டெல்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், யாரும் கைதுசெய்யப்படவில்லை. எங்களை பாரபட்சத்துடன் குற்றம் சாட்டுகின்றனர் என தெரிவித்தார்.