இந்தியா

அம்ரித்பால் சிங் காலிஸ்தான் கரன்சியை அச்சிட்டது அம்பலம்- டெல்லியில் பதுங்கல்?

Published On 2023-03-25 11:43 GMT   |   Update On 2023-03-25 11:43 GMT
  • அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  • அம்ரித்பால் சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சண்டிகர்:

பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் செயல்படும் பஞ்சாப் தி வாரிஸ் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறி தப்பிய அம்ரித்பால் சிங் மாறுவேடத்தில் சாதாரண உடைகளில் வலம் வரலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணி இன்றுடன் 8-வது நாளாக தொடர்கிறது.

அவரை தேடி அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் அந்தந்த மாநிலங்களின் போலீசாரும், பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்நிலையில் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான அமித்சிங் என்பவரை டெல்லியின் திலக்விகார் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அம்ரித்பால் சிங்கும் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் சாது வேடத்தில் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் அவர் டெல்லியில் ஒரு பஸ் நிலைய பகுதியில் இருந்து பஸ்சில் ஏறியதாகவும் கூறப்படுவதை அடுத்து டெல்லியில் பல்வேறு இடங்களிலும் போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே தலைமறைவாக உள்ள அம்ரித்பால் சிங் காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டது தெரிய வந்துள்ளதாக போலீஸ் அதிகாரி அம்னித் கவுந்தல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்ரித் பால்சிங் காலிஸ்தானுக்கான கொடியை வடிவமைத்துள்ளார்.

அமெரிக்க டாலரை போன்று காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டுள்ளார். அது டாலரில் இருந்து நகல் எடுக்கப்பட்ட கரன்சி போல இருந்தது. அதில் காலிஸ்தானின் வரைபடமும் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும் ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) போன்று அம்ரித் பால்சிங் தனக்கென ஒரு புலிப்படையையும் உருவாக்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த படையின் உறுப்பினர்களுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்படுவது போன்று பெல்ட் பெயரில் ஏ.கே.எப். எண்கள் வழங்கப்பட்டன. அந்த படையின் உறுப்பினர்கள் கைகளில் ஏ.கே.எப். பச்சை குத்தி இருந்தனர்.

அம்ரித் பால்சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News