கைதான ரெயில்வே அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது- ரூ.2.61 கோடியை சி.பி.ஐ. மீட்டது
- பணத்தை லஞ்சமாக பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
- கே.சி.ஜோஷி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தென்கிழக்கு ரெயில்வே, முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றி வருபவர் கே.சி.ஜோஷி. இவர் ரெயில்வே துறைக்கு வருடாந்திர ஒப்பந்தத்தில் லாரிகள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக அந்த நிறுவனத்தின் சார்பில் உரிமையாளர் பிரணவ் திரிபாதி சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தார்.
இந்த ஒப்பந்த நிறுவனம் ஒரு லாரிக்கு மாதத்துக்கு ரூ.80 ஆயிரம் வீதம் ரெயில்வே துறைக்கு லாரிகளை சப்ளை செய்கிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் மின்னணு சந்தை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி மாதத்தில் மின்னணு இணையதளம் மூலம் வடகிழக்கு ரெயில்வேயில் 3 டிரக்குகளை வழங்குவதற்கான டெண்டரை அவர் பெற்றிருந்தார். இதற்காக ஒரு லாரிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை செல்லுபடியாகும்.
மின்னணு இணையதளத்தில் இருந்து திரிபாதியின் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யுமாறு கே.சி.ஜோஷி கடிதம் எழுதியதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், நடந்து வரும் டெண்டரை ரத்து செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜோஷியை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியபடி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் ரெயில்வே அதிகாரி ஜோஷியிடம் சென்று ரூ.3 லட்சம் அளித்தனர். அந்த பணத்தை லஞ்சமாக பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கே.சி.ஜோஷி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோரக்பூரில் உள்ள அவரது அலுவலகம், இல்லம் மற்றும் நொய்டாவில் உள்ள சொந்த வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ரூ.2.61 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.