சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 25-ந்தேதி வரை நீட்டிப்பு
- அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
- சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இதில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக கூறி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோரை கொண்ட அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இடைக்கால ஜாமின் கிடைத்த போதிலும், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத காரணத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.