"எதிர்காலம் குறித்து நம்பிக்கை"- ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவுரையில் பிரதமர் மோடி
- "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் முழக்கம் இடம்பெற்றிருந்தது.
- "உலகம் முழுவதிலும் அமைதியும் நம்பிக்கையும் நிலவட்டும்" என்றார்.
ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது.
இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய தலைநகர் புது டெல்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் எனும் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
இம்மாநாட்டின் மையக்கருவாக "வசுதைவ குடும்பகம்" எனும் தத்துவத்தின் அடிப்படையில் "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் முழக்கம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாநாடு நிறைவடைந்ததையடுத்து, இந்த கூட்டமைப்பின் தலைமை, பிரேசில் நாட்டிற்கு வழங்கப்பட்டது. அடுத்த வருடம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இந்த கூட்டமைப்பின் அடுத்த சந்திப்பு நடைபெறும்.
அதிகாரபூர்வமாக பிரேசில் இந்த தலைமை பொறுப்பை டிசம்பர் மாதம் ஏற்று கொள்ளும். அதுவரை இந்தியா இதன் சம்பிரதாய தலைமையில் இருந்து வரும்.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இறுதி உரை நிகழ்த்தினார்.
அதில் அவர் கூறியதாவது:-
நண்பர்களே.. எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிரேசிலுக்கு முழு ஆதரவை வழங்குவோம். அவர்களின் தலைமையின் கீழ் ஜி20 அதன் இலக்குகளை மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பிரேசில் அதிபர் மற்றும் எனது நண்பர் லூலா டி சில்வா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஜி20 தலைமை பதவியை அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, நவம்பர் மாத இறுதி வரை ஜி20 தலைமையில் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களில், நீங்கள் அனைவரும் இங்கு பல விஷயங்களை முன்வைத்து, பல பரிந்துரைகளை வழங்கியுள்ளீர்கள். மேலும், புதிதாக பல திட்டங்களையும் முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் வழங்கியிருக்கும் பரிந்துரைகள், அவற்றின் மீதான அடுத்த கட்ட நகர்வுகள், அவற்றை எவ்வாறு இயக்க முடியும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
நவம்பர் பிற்பகுதியில் ஜி20 உச்சி மாநாட்டின் மெய்நிகர் அமர்வை (virtual session) நடத்த வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். அந்த அமர்வில், இந்த உச்சி மாநாட்டின் போது முடிவு செய்யப்பட்ட திட்டங்களை நாம் மதிப்பாய்வு செய்யலாம். இதற்கான விவரங்கள் அனைத்தையும் உங்கள் அனைவருடனும் எங்கள் குழு பகிர்ந்து கொள்ளும். நீங்கள் அனைவரும் அதில் பங்கு பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
இதன் மூலம், இந்த ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவை அறிவிக்கிறேன். "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் கோட்பாட்டின் வழித்தடம் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
"ஸ்வஸ்தி அஸ்து விஸ்வஸ்ய!" - அதாவது, "உலகம் முழுவதிலும் அமைதியும் நம்பிக்கையும் தழைத்தோங்கட்டும்."
140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இவ்வாறு பிரதமர் மோடி தனது நிறைவுரையில் கூறினார்.
Sharing my remarks at the closing ceremony of the G20 Summit. https://t.co/WKYINiXe3U
— Narendra Modi (@narendramodi) September 10, 2023