ரூ. 30 லட்சம் ரொக்கத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற திருடர்கள்
- ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
- ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.
"ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."
"இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.