அரவிந்த் கெஜ்ரிவாலை உயிருடன் எரிக்க முயற்சி.. 'திரவ வீச்சு' சம்பவத்தில் ஆம் ஆத்மி பரபரப்பு புகார்
- தாக்குதல் நடத்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஸ்பிரிட் திரவத்தை வீசினார்
- அந்த நபர் மற்றொரு கையில் தீக்குச்சியை வைத்திருந்தார்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை கிரேட்டர் கைலாஷ் பகுதியில் மாளவியா நகர் பகுதியில் நடந்த பாத யாத்திரையில் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து கெஜ்ரிவாலை நெருங்கிய நபர் ஒருவர் அவர் மீது மர்ம திரவத்தை வீசினார்.
உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து அடித்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர். கெஜ்ரிவாலும் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார். தலைநகரில் முதல்வராக இருந்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் சாமானியர் எப்படி நடமாட முடியும் என்று டெல்லி சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள மத்திய பாஜக அரசிடம் ஆம் ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் கிரேட்டர் கைலாஷ் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் அரவிந்த், கெஜ்ரிவால் மீதமான தாக்குதல் பற்றிய பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கெஜ்ரிவாலை உயிருடன் எரிக்க முயன்றதாகச் சவுரப் பரத்வாஜ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஸ்பிரிட் திரவத்தை வீசினார். அது என் மீதும் பட்டது. அந்த நபர் மற்றொரு கையில் தீக்குச்சியை வைத்திருந்தார், இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு அவரை தடுத்து நிறுத்தியதால், கெஜ்ரிவாலை எரிக்க முடியவில்லை.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கோஷ்டி சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன, மேலும் மக்களிடம் மாமூல் பணம் கேட்கப்படுகிறது. கிரேட்டர் கைலாஷில் ஜிம்மிற்கு வெளியே ஜிம் உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டார், பஞ்சசீலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.பாஜக தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் தோற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கெரஜிவால் மீது வீசப்பட்ட திரவம் தண்ணீர் தான் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.