24 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப காரணங்களை தூண்டியது யார்? சன்னி தியோல் விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி
- 55.99 கோடி ரூபாய்க்காக ஏலம் விடப்படும் என நேற்று அறிவிப்பு
- இன்று காலை அந்த அறிவிப்பு திரும்பப்பெறுவதாக பரோடா வங்கி அறிவித்தது
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். இவர் பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2022-ல் இருந்து பேங்க் ஆஃப் பரோடாவில் சுமார் 55.99 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சன்னி தியோல் தந்தை தர்மேந்திரா வங்கியில் தனி உத்திரவாதம் அளித்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்தாததால், ஜூகுவில் உள்ள அவரது பங்களாவை, வங்கி நேற்று முடக்கியது. அத்துடன் வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டது.
ஆனால், இன்று காலை தொழில்நுட்ப காரணமாக ஏலம் அறிவிப்பு திரும்பப் பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதா எம்.பி. என்பதால் வங்கி உடனடியாக திரும்பப்பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நேற்று நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.
இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.