உத்தரகாண்டில் கேதார்நாத் கோவிலுக்கு அருகே பனிச்சரிவு
- மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
- பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10-ந் தேதி திறக்கப்பட்டது.
அப்போது முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகின.