NCERT பாடப் புத்தகத்தில் பாபர் மசூதியின் பெயர் 'முக்குவிமான கட்டிடம்' என மாற்றம்
- புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டது.
- 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை பகுதி நீக்கப்பட்டுள்ளது.
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'முக்குவிமான கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.
குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு பழைய பாடப்புத்தகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் நினைவாக அவரது தளபதி மீர் கட்டிய மசூதி தான் பாபர் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் 1528 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இடத்தில முக்குவிமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று பாபர் மசூதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்குவிமான கட்டிடத்தில் இந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.