இந்தியா- வங்காளதேச எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு: கொல்கத்தாவில் உயர் அதிகாரிகள் ஆய்வு
- மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராணுவம் இடைக்கால அரசை அமைக்க உள்ளது.
வங்காளதேசம் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்காளதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் வன்முறை வெடித்துள்ளதால் அங்குள்ளவர்கள் இந்தியாவுக்குகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியா- வங்காளதேச மாநில எல்லையில் உயர் பாதுகாப்புக்கான உத்தரவை எல்லை பாதுகாப்புப்படை விடுத்துள்ளது. அத்துடன் எல்லை பாதுகாப்புப்படையின் பொது ஜெனரல் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மற்ற சீனியர் கமாண்டர்கள் மேற்கு வங்காள மாநிலம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அனைத்து கமாண்டர்களுக்கும் எல்லையில் வீரர்களை குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேச எல்லை 4096 கி.மீட்டர் நீளம் கொண்டது. மேற்கு வங்காள மாநிலத்துடன் 2217 கி.மீட்டரும், திரிபுராவுடன் 856 கி.மீட்டரும், மேகலயாவுடன் 443 கி.மீட்டரும், அசாம் உடன் 262 கி.மீட்டரும், மிசோரமுடன் 318 கி.மீட்டரும் வங்காளதேசம் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.