டெல்லியில் 107 போலி வக்கீல்கள் நீக்கம்- பார் கவுன்சில் தகவல்
- போலி வக்கீல்களை கண்டறிந்து நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- முழுமையான விசாரணை மூலம் கடந்த 2019 முதல் ஆயிரக்கணக்கான போலி வக்கீல்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய பார் கவுன்சில் தனது கண்ணியம் மற்றும் நிபுணத்துவத்தை பராமரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் போலி வக்கீல்களை கண்டறிந்து நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் 107 போலி வக்கீல்களை கவுன்சிலில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போலி வக்கீல்கள் மற்றும் சட்ட நடைமுறையின் தரத்தை பேணாதவர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும், சட்ட அமைப்பையும் நெறிமுறையற்ற நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க இந்திய பார் கவுன்சில் தொடர்ந்து முயன்று வருகிறது' என குறிப்பிட்டு இருந்தது.
மேலும் அறிக்கையில், 'முழுமையான விசாரணை மூலம் கடந்த 2019 முதல் ஆயிரக்கணக்கான போலி வக்கீல்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் போலியான சான்றிதழ்கள் மற்றும் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கியவர்கள் ஆவர். மேலும், தீவிரமான வக்கீல் பணிகளில் தோல்வி, பார் கவுன்சிலின் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு இணங்காதது போன்றவையும் காரணமாகும்' என்றும் கூறப்பட்டு உள்ளது. இதில் டெல்லியில் மட்டுமே 107 போலி வக்கீல்களை நீக்கி இருப்பதாகவும், அவர்களின் பெயரையும் பார் கவுன்சில் ஸ்ரீமாந்தோ சென் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.