இந்தியா

சிலந்தி ஆற்றில் தடுப்பணை- பணியை நிறுத்த அதிரடி உத்தரவு

Published On 2024-05-24 13:03 GMT   |   Update On 2024-05-24 13:14 GMT
  • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
  • கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News