முடிவுக்கான ஆரம்பம்: மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைதான நிலையில் கவர்னர் பதிவு
- சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்தது.
- அவரது வீட்டிலும் சோதனை நடத்தியிருந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியது. அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் "இது முடிவுக்கான ஆரம்பம்" என மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விவரமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, ஆளுநர் மூலமாக, தங்களுடைய மகள் கொலை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியதாக ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 9-ந்தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் டாக்டர் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.