ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: 3200 பக்க குற்றப்பத்திரிக்கையில் சாமியார் போலே பாபா பெயர் இல்லை
- ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
- குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு மாயாவதி கடும் கண்டனம்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உடைபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பாக 3200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாமியார் போலே பாபா பெயர் இதில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.