இந்தியா

தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற பாஜகவினர்

லம்பி வைரசுக்கு 57,000 கால்நடைகள் பலி... ராஜஸ்தான் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்

Published On 2022-09-20 11:54 GMT   |   Update On 2022-09-20 11:54 GMT
  • சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
  • பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன

லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.

பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News