டெல்லியில் இன்று பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்
- டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பேரணி.
- பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக வரும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என இந்தியா கூட்டணி அறிவித்தது.
அதன்படி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசின் முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.
இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன், முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.