இந்தியா

32 வருட மண வாழ்க்கை - கோடீசுவரர் புது முடிவு

Published On 2023-11-13 09:25 GMT   |   Update On 2023-11-13 14:16 GMT
  • நவாஸ் என்பவரை கவுதம் சிங்கானியா திருமணம் செய்து கொண்டார்
  • அவர்கள் வீட்டிற்கு உள்ளே செல்ல நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டது

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் சிங்கானியா (58).

பல கோடிகள் வருவாய் ஈட்டும் உயர்ரக ஆடைகளை விற்பனை செய்யும் ரேமண்ட்ஸ் குழுமத்தின் தலைவரான இவர், அதன் நிர்வாக இயக்குனராகவும் செயல்படுகிறார். அதி வேக கார்களை விரும்பி வாங்கும் பழக்கமுடைய இவர், கார் போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பமுடையவர்.

கவுதம் சிங்கானியா, நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாகவே சிங்கானியா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன.

சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில, தானே (Thane) நகரில் உள்ள சிங்கானியா குழுமத்திற்கு சொந்தமான மிக பெரிய பண்ணை வீட்டில் தீபாவளி விருந்து நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள கவுதமின் மனைவி நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை நவாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், கவுதம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் செய்தி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

எங்கள் 32 வருட மண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்புடன் வாழ்ந்து வந்த எங்கள் வாழ்வு குறித்து பலர் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பி வந்தனர். இனி நானும், நவாஸும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் இரு குழந்தைகளுக்கும் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வோம். எங்கள் தனிப்பட்ட இந்த முடிவை மதித்து நிலைமை சீரடைய ஒத்துழையுங்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளை கோருகிறேன்.

இவ்வாறு கவுதம் பதிவிட்டுள்ளார்.

32 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்த கோடீசுவர தம்பதியினரின் விவாகரத்து செய்தி ,சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News