இன்று மணிப்பூரில் நடக்கும் அனைத்தும் காங்கிரசால் உருவாக்கப்பட்டவை: பிரேன் சிங்
- லடாக் சென்றிருந்த ராகுல் காந்தி மணிப்பூர் குறித்து பேச்சு
- மக்கள் உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது
மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இன்று மணிப்பூரில் நடைபெறும் அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இதுகுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-
நாங்கள் அவருடைய ஆலோசனையை எப்போதும் எடுத்துக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்டபிறகு மணிப்பூரில் அமைதி நிலவுகிறது. தற்போது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மற்றும் மீண்டும் குடியேற்றத்திற்கான வழக்கமான பணி. இதற்கான உள்துறை அமைச்சரின் ஆலோசனையைப் பெறவே நாங்கள் வந்துள்ளோம்.
லடாக்கில் இருக்கும்போது ராகுல் காந்தியால் எப்படி மணிப்பூர் குறித்து நினைக்க முடியும்?. நீங்கள் லடாக் சென்றீர்கள் என்றால், லடாக்கை பற்றி பேச வேண்டும். இன்று மணிப்பூரில் நடப்பது அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை. மனித உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது'' என்றார்.
பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையின்போது, "ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதி மட்டுமே தீர்வு. மணிப்பூரில் அமைதி நிலவ மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.