பணிச்சுமை மரணங்களுக்கு பாஜக அரசே பொறுப்பு.. மக்கள் மீது மன ரீதியான தாக்குதல் - அகிலேஷ் காட்டம்
- நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் வருந்தினார்
- பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
பணியிட அழுத்தத்தால் கடந்த வாரம் புனேவில் எர்னஸ்ட் அண்ட் எங் நிறுவனத்தில் சிஏ வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் தற்கொலை செய்து உயிரிழந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 45 வயது பெண் ஊழியர் பாத்திமா வேலைசெய்து கொண்டிருந்தபோதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதற்கிடையில் அன்னாவின் மரணம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி பேசாமல். பணிச்சுமையைச் சமாளிக்கக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று ஒரு தலை பட்சமாகப் பேசியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்று வரும் நிலையில் தொடரும் பணிச்சுமை மரணங்கள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளால் நிறுவனங்கள் தங்களின் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றன.
இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு பாஜக அரசு தான் பொறுப்பு. இந்த மரணங்கள் குறித்து பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இதுபோன்ற மரணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.