'பாஜக என்பது விரைவில் அணையப் போகும் விளக்கு'.. அகிலேஷ் யாதவ் பரபர கருத்து
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்
- கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனவர் ஆவார். இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக வெற்றியை பதிவு செய்து பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது சமாஜ்வாதி கட்சி.
அகிலேஷ் யாதவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் என 5 பேர் எம்.பியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைகளில் உரிமையாளர்களின் பெயர்களை குறிப்பிட பாஜக அரசு இட்ட உத்தரவு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர இருந்த தடையை நீக்கியது உள்ளிட்டவற்றை சாடிய அகிலேஷ் யாதவ், கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். விரைவில் அணைந்துபோவதற்கு முன் விளக்கு விட்டு விட்டு எரிந்து மினுங்குவதுபோல், இப்போது அவர்கள் [பாஜக] விட்டுவிட்டு மினுங்கியபடி எரிந்துகொண்டிருக்கின்றனர். எனவேதான் அதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.