இந்தியா

பிராந்திய கட்சிகளை சாப்பிட்ட பாஜக-தான் ஒட்டுண்ணி: பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

Published On 2024-07-04 13:45 GMT   |   Update On 2024-07-04 13:45 GMT
  • பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார்.
  • ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார்.

பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் பேசும்போது தற்போதைய காங்கிரஸ் ஒட்டுண்ணி. கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கரஸ் கட்சியின் பொதுசெயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பாஜக-தான் ஒட்டுண்ணி. பிராந்திய கட்சிகளை சாப்பிட்டது என பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில், அதேபோல் மாநிலங்களவை கூட்டத்தொடரில் இரண்டு குறிப்பிட்ட விசயங்களை பார்த்திருக்க முடியும். ஒன்று இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் புதிய, ஆக்ரோஷம், புத்துயிர் பெற்றது.

அதேவேளையில் பிரதமர் மோடியின் அணுகுமுறை மற்றும் நடத்தையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாததையும் காண முடிந்தது.

பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார். அங்கே மாற்றத்திற்கான எந்த ஆதாரங்கள் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் புதிய மற்றும் ஆக்ரோஷம், செயல்பாட்டிற்கான ஆதாரங்கள் இருந்தன.

இது கூட்டணி ஆட்சிக்கான அதிகாரம் என்பதையும், மக்களை அழைத்துச் செல்வதற்கான அதிகாரம் என்பதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்ற அனைத்துக் கட்சிகளின் பேச்சைக் கேட்பதற்கான ஆணை என்பதையும் அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என நம்புகிறோம்.

ஒட்டுண்ணி (பாஜக) மட்டுமே அந்த வார்த்தையை பயன்படுத்த முடியும். நீங்கள் ரெக்கார்டுகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால், எத்தனை பிராந்திய கட்சிகள் பாஜக-வால் சாப்பிடப்பட்டது என்பது தெரியும்.

இன்று பிஜு ஜனதா தளம். காலநிலை மாற்றத்தை பார்க்க முடியும். மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியுடனே அவர்கள் நின்றார்கள். ஆகவே, யாரேனும் ஒட்டுண்ணி என்றால் அது பாஜக-தான்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியை மூன்று முறை தொடர்ந்து மக்கள் நிராகரித்துள்ளனர். 2029-ம் ஆண்டிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும். 543 தொகுதிகளில் 99-ல் வெற்றிபெற்று 100-க்கு 99 தொகுதிகளை வென்றதுபோல் காங்கிரஸ் மக்களை மக்களை ஏமாற்ற பார்க்கிறது. பாஜக கூட்டணி தோற்றதைபோல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு நேர் எதிராக நின்ற இடங்களில் 26 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 1984-க்குப் பிறகு 10 மக்களவை தேர்தலில் ஒருமுறை கூட 250 இடங்கைள தாண்டியது கிடையாது.

தற்போது இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி, வாக்கு வங்கி குறைவு. கூட்டணி கட்சி பலத்தை தன் பலமாக காட்ட முயலும் ஒட்டுண்ணி காங்கிரஸ்.

தமிழகம், பீகாரில் ஜூனியர் பார்ட்னராக தேர்தலை எதிர்கொண்டது. 13 மாநிலங்களில் ஜீரோவான காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டுகிறது.

Tags:    

Similar News