இந்தியா

'இளைஞர்களை ஏமாற்றும் பாஜக.. மோடி அண்ட் கம்பெனிக்கு ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பதில்' - கார்கே தாக்கு

Published On 2024-09-01 13:16 GMT   |   Update On 2024-09-01 16:03 GMT
  • ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • 2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீர்  தேர்தல் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனி

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு இங்கிருந்து வெளியேறும் கதவை இளைஞர்கள் நிச்சயம் காண்பிப்பார்கள். கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

 

 

2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பணியில் உள்ள 60,000 அரசு ஊழியர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வருமானம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலருக்கு பணி உறுதி செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

Tags:    

Similar News