மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
- பா.ஜனதா 163 இடங்களில் வெற்றி பெற்றது.
- சிவ்ராஜ் சிங் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.
இந்த 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதல்-மந்திரி பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்திருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அங்கு மோகன் யாதவ் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 54 வயதாகும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜனதா கட்சியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. மோகன் யாதவ் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்கும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மோகன் யாதவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மோகன் யாதவுடன் மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.