'வெளிநாட்டு சதியால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சீட்களை இழந்தது' - சிவராஜ் சிங் சவுகான் பகீர்
- வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
- 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன'
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி தேர்தலை சந்தித்த பாஜக, கூட்டணி வெற்றியை சேர்க்காமல் தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு ஆட்சியமைதுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் உத்தரப் பிரதேசம் உள்ள மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
இந்த நிலையில்தான் தற்போதைய பாஜக அரசில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் தோற்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடே காரணம் என்று பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இன்று ராஜஸ்தானில் நடந்த சுமார் 88,000 உறுப்பினர்கள் பாஜக கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவுகான், 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன. அந்த வெளிநாட்டு சக்திகள் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை' என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் சுமார் 16 ஆண்டுகள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.