மத்திய அரசின் திட்டத்தையே இந்தியில் தப்பு தப்பாய் எழுதிய பாஜக அமைச்சர் - வைரல் வீடியோ
- 'Beti Bachao, Beti Padhao' மத்திய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் எழுத்து பிழையுடன் எழுதிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற சாவித்ரி தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், தனது தொந்த தொகுதியில் அரசு சார்பில் நடந்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ('Beti Bachao, Beti Padhao') என்ற மத்திய அரசின் திட்டத்தை இணையமைச்சர் இந்தியில் எழுதும் பொழுது எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரல் வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் கேகே மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், "தங்களது தாய்மொழியை கூட எழுத தெரியாதவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் துரதிஷ்டம். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு துறையை நிர்வகிக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சாவித்ரி தாகூர் தனது வேட்புமனுவில் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.