இந்தியா

'எமர்ஜென்சி'யை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

Published On 2024-06-26 12:24 GMT   |   Update On 2024-06-26 12:24 GMT
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
  • இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

* இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

* எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

* எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் லாலன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News