இந்தியா

உடைந்த பல்- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: ஒன்று சேர்ந்த அண்ணன்- தங்கை

Published On 2024-06-29 09:27 GMT   |   Update On 2024-06-29 09:27 GMT
  • ஒருநாள் ரீல்ஸ்களை பார்த்த ராஜ்குமாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
  • நெகிழ்ந்த கோவிந்த் கடந்த 20-ந்தேதி அன்று ராஜ்குமாரியின் கிராமத்திற்கு வந்தார்.

கான்பூர்:

சமூக வலைத்தளங்கள் மூலம் காணாமல் போனவரை கண்டுபிடித்தது தொடர்பான செய்திகள் அண்மை காலமாக நிகழ்ந்து வருகிறது. அதேபோல் குடும்ப பாடலை பாடி தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான காட்சிகள் சினிமா படக்காட்சிகளில் வரும். இவ்விரு விஷயத்தையும் கிட்டத்தட்ட சேர்ந்தாற் போல் ஒரு சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது.

கான்பூரை சேர்ந்த ராஜ்குமாரி என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பார்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் ரீல்ஸ்களை பார்த்த ராஜ்குமாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரீல்சில் காணப்பட்ட ஒருவரின் முகம் பழக்கப்பட்ட முகமாக இருந்தது. இதனால் சற்று உற்று கவனித்த ராஜ்குமாரிக்கு அது தொலைந்து போன அண்ணன் என தெரியவந்தது.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை தேடுவதற்காக சென்ற ராஜ்குமாரி அண்ணன் பால் கோவிந்த் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ராஜ்குமாரிக்கு ரீல்ஸ் உதவி உள்ளது. அதிலும் சுவாரசியம் என்னவென்றால் கோவிந்தை கண்டுபிடிக்க உதவியது அவரது உடைந்த பல் தான். ஆம் சின்ன வயதில் கோவிந்தின் பல் ஒன்று உடைந்து இருக்கும் என்று கூறுகிறார் ராஜ்குமாரி.

அண்ணன் கிடைத்த மகிழ்ச்சியில், ராஜ்குமாரி தனது சகோதரனை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரும்படி கெஞ்சினார். இதனால் நெகிழ்ந்த கோவிந்த் கடந்த 20-ந்தேதி அன்று ராஜ்குமாரியின் கிராமத்திற்கு வந்தார்.

இதனால் பல ஆண்டு காலம் பிரிந்த அண்ணன் - தங்கை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் உடைந்த பல் மூலம் ஒன்றிணைந்தனர்.

Tags:    

Similar News