இந்துக்களுக்கு எதிரானது அல்ல.. பாஜகவுக்கு எதிரானது- ராகுல் கருத்தை நியாயப்படுத்தும் பிரியங்கா
- ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
- தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள்.
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது "நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள்.
ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்றார்.
இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என தனது கண்டனத்தை தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவை சில நிமிடங்கள் அமளியாக காணப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எனது சகோதரர் (ராகுல்) இந்துக்களுக்கு எதிராக ஒருபோதும் பேச மாட்டார். அவர் பாஜகவைப் பற்றியும், பாஜக தலைவர்களைப் பற்றியும் பேசியுள்ளார்" என்றார்.