இந்தியா

பிரதமருக்கு தலை வணங்குவது நியாயமா?... சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி- பதில் அளித்த ஓம் பிர்லா

Published On 2024-07-01 12:18 GMT   |   Update On 2024-07-01 12:18 GMT
  • நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள்.
  • மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்- ராகுல் காந்தி.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது நீட், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அப்போது சபாநாயகரையும் விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் பிரதமர் மோடியின் முன் தலை வணங்கியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

நீங்கள்தான் (சபாநாயகர்) மக்களவையின் இறுதி நீதிபதி. உங்களுடையதுதான் கடைசி வார்த்தை. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. சபாநாயகர் இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

நான் சில விசயங்களை கவனித்தேன். நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள். மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்" என்றார்.

அப்போது பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் ஓம் பிர்லா நமது பாரம்பரியம்படி மூத்தவர் என்பதால் தலை வணங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓம் பிர்லா கூறுகையில் "பிரதமர் இந்த அவையின் (மக்களவை) தலைவர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் தன்னைவிட மூத்தவர்கள்களுக்கு தலைவணங்க வேண்டும் என சொல்கிறது. நான் அவற்றை கற்றுள்ளேன்.

இந்த இருக்கையில் இருந்து என்னுடைய கலாச்சாரப்படி மூத்தவர்களுக்கு தலைவணங்குவது, தேவைப்பட்டால் காலை தொடுவது கூட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்றார்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "மக்களவையில் சபாநாயகரை விட பெரியவர் யாரும் கிடையாது, எல்லோரும் அவருக்கு தலை வணங்க வேண்டும். நான் உங்களுக்கு தலை வணங்குவேன்" என்றார்.

Tags:    

Similar News