பாஜக ஒன்றும் இந்து கடவுள்களின் பாதுகாவலன் அல்ல- மஹுவா மொய்த்ரா பதிலடி
- மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது.
- காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
கொல்கத்தா:
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா காளி குறித்து கூறிய கருத்தும் புயலை கிளப்பியது.
காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் என்று கூறிய மஹுவா மொய்த்ரா, ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு என்று தெரிவித்தார். மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரசும் கண்டனம் தெரிவித்தது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவின் விமர்சனங்களுக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். பாஜக இந்து தெய்வங்களின் பாதுகாவலர் அல்ல, வங்காளிகளுக்கு தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று கற்பிக்கக் கூடாது, என்றார்.
"கடந்த 2,000 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் மீது, வட இந்தியாவில் தெய்வங்களை வழிபடும் முறைகளின் அடிப்படையில் பாஜக தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது. அந்த முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து பேசியதன் மூலம் நான் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறேன்.
ராமரோ, அனுமனோ பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த கட்சி இந்து தர்மத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது. ஆனால் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டது. காளியை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாஜக கற்றுக் கொடுக்கக் கூடாது. காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும். கடந்த 2,000 ஆண்டுகளாக இதே முறையில் அம்மனை வழிபட்டு வருகிறோம்" என்றும் மொய்த்ரா கூறினார்.