அரியானா சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
- அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
- அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
அரியானா மாநிலத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலை முன்னிட்டு, பாஜக ஆட்சியை தக்கவைக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி அரியானாவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தனது 67 வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளத.
இதில், லத்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார்.
மேலும், அம்பாலா கான்ட் தொகுதியில் அனில் விஜ், ராட்டி தொகுதியில் சுனிதா துகல், பஞ்ச்குலா தொகுதியில் கியான் சந்த் குப்தா, ஜகத்ரி தொகுதியில் கன்வர் பால் குர்ஜார், ஆதம்பூர் தொகுதியில் பவ்யா பிஷ்னோய், சோஹ்னா தொகுதியில் தேஜ்பால் தன்வார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக தவிர, ஜனநாயக் ஜனதா கட்சி- ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் வரும் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது.
முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, அவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் உச்சன கலன் தொகுதியில் போட்டியிடுகிறார். பட்டியலில் 15 வேட்பாளர்கள் ஜேஜேபியை சேர்ந்தவர்கள், நான்கு பேர் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஏஎஸ்பி ஆகும்.