திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பாஜக ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்- அகிலேஷ் யாதவ்
- சண்டிகர் மாநில மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
- தேர்தல் நடத்திய அதிகாரி ராஜினாமா செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கண்டிப்பு.
சண்டிகர் மாநிலத்தின் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு மூலமாக, பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியானது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்ததை அதிகாரி ஒப்புக்கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகார பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன்றவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்காது" என்றார்.
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத்துரோகத்திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்." என்றார்.