பாஜக-வின் ஊழல் நாட்டை பலவீனப்படுத்துகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
- கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.
- இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.
நீட் பேப்பர் லீக்கானதில் எதிர்க்கட்சிகள் பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இது ஒரு ஊழல் என வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பிரிங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ள இந்த பேப்பர் லீக் மோசடி, மோடி தலைமையிலான பாஜக அரசின் கீழ் நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
நாம் மிகப்பெரிய அளவில் இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளோம். இந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.
வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்பம் செய்ய இளைஞர்கள் செலவு செய்கிறார்கள். அதன்பின் தேர்வு எழுதுவதற்கான பயணம் செய்ய செலவு செய்கிறார்கள். ஊழல் காரணமாக இறுதியாக அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகப் போகிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.