பாஜகவின் 'இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் ஆபத்து' என்ற பாச்சா மகாராஷ்டிராவில் பலிக்காது - அஜித் பவார்
- தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
- மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார்
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யனாத் வாசகத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.
இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
இந்நிலையில் பாஜகவின் இந்த வாசகம் குறித்து அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தற்போது விமர்சித்துள்ளார். சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவுடன் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதிவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியிடம் பாஜக கூட்டணி அதிக இடங்களை இழந்ததால் கூட்டணியில் உள்ள அஜித் பவார் மீது அதிருப்தி எழுந்தது.
அதுமுதல் அவ்வப்போது அஜித் பவார் கூறி வரும் கருத்துக்கள் பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்தன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அஜித் பவார் பேட்டியளித்துள்ளார்.
அங்கு, batenge toh katenge' [ நாம் பிரித்திருந்தால் நம்மை வெட்டுவார்கள்] , ek hain toh safe hain [ ஒருவராக இருந்தால் ஆபத்து - இருவராக இருந்தால்தான் பாதுகாப்பு] எனவே இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்ற செய்தித்தாள்களிலும் பிரசார மேடைகளிலும் பாஜக விளம்பரப்படுத்துவதைப் பற்றி அஜித் பாவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நான் முதலில் இருந்தே அதை ஆதரிக்கவில்லை. பல முறை இதுபற்றி நான் கூறியிருக்கிறேன். மகாரஷ்டிராவில் இந்த வாசகங்கள் வேலைக்கு ஆகாது. உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பிற இடங்களில் வேண்டுமானால் இவை வேலை செய்யலாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத் கூறிய இந்த கோஷம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அஜித் பவார், மகாராஷ்டிரா சதிராபாத்தில் சிவாஜி மகாராஜ், ராஜார்ஷி சாஹு மகாராஜ், மகாத்மா பூலே ஆகியோரும் நிலம். எனவே மகாராஷ்டிராவை மற்ற மாநிலங்களுடன் நீங்கள் ஒப்பிட முடியாது, இங்குள்ள மக்கள் இதை விரும்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் கடந்த வாரம் நடந்த பேரணியின்போது பேசிய அஜித் பவார், மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார். ஒரு பக்கம் பாஜக இந்த கோஷங்களுக்கு செய்தித்தாள்களின் விளம்பரம் கொடுத்து ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில் மறுபுறம் இதற்கு கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.