ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு 2 மாதம் இடைக்கால ஜாமின் - மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
- சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறையால் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்
- வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிபதி முன் ஆஜரான அவர், உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பது நல்லது என்றார்
ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவராக நரேஷ் கோயல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.
இதற்கிடையே, அவர் கனரா வங்கியில் இருந்து ரூ.538 கோடி வாங்கி அதனை கட்டாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வங்கி சார்பில் நரேஷ் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் மீதும், மனைவி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை நரேஷ் கோயலை கைதுசெய்தது. அதன்பின் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது 71 வயதாகும் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடலில் நடுக்கம், முழங்கால்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறுதல், 2 கால்களையும் மடக்கமுடியாமல் அவதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் சிறப்பு நீதிபதி மொஜிதேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது அவர் தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி நான் வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது மனைவி படுத்த படுக்கையாக உள்ளார். அவரைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. இனி நான் உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பதே நல்லது எனக்கூறி கதறி அழுதார். ஆனால் அப்போது அவர்க்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு உடல் நலக் காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நரேஷ் கோயிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயலின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.