புற்றுநோய் குணமாக கங்கையில் நீராடல்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் பலியான 4 வயது சிறுவன்
- கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் என பெற்றோர்கள் நம்பிக்கை.
- குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்ததால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், ரத்த புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் கவலையில் இருந்துள்ளனர். தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றொர், புனித நதியாக கருதப்படும் கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர்.
இதனால் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றனர். அவர்களுடன் அந்த சிறுவனின் அத்தையும் சென்றுள்ளார். டேராடூன் சென்ற அவர்கள் நேற்று காலை கங்கை நதியில் இறங்கி, அந்த சிறுவனை அவனது அத்தை நீரில் மூழ்கடித்துள்ளார்.
தற்போது வடமாநிலங்களில் கடுங்குளர் நிலவி வருகிறது. மேலும், ரத்த புற்றுநோயால் சிறுவன் மெலிந்து காணப்பட்டுள்ளான். இதனால் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுவன் திணறியுள்ளான். அவனை நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். இதை அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அந்த சிறுவனின் அத்தை, அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இருந்தபோதிலும் அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவனை நீரில் இருந்து வெளியில் தூக்கியுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தபோது அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும், சிறுவனின் உடலை வைத்து அவனது அத்தை, உயிருடன் திரும்பிவிடுவான் என வழிபாடு செய்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபக்கம் ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், மறுபக்கம் அதீத தெய்வ நம்பிக்கையின் மூலம் ஐந்து வயது சிறுவனின் உயர் பறிபோகியுள்ளது.