இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா 6 நாட்கள் போலீஸ் காவல்: புலனாய்வு குழுவினரிடம் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2024-06-01 03:46 GMT   |   Update On 2024-06-01 03:46 GMT
  • ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
  • நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.

ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிளட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் ஜெர்மனியில் இருந்து அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்ைட ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெர்மனி முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பிரஜ்வல் ரேவண்ணா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் 4-வது மாடியில் உள்ள 42-வது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி கே.என்சிவகுமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.க்கு வருகிற 6-ந்தேதி வரை 6 நாட்கள் எஸ்ஐடி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியும் நீங்கள் ஏன் கண்டுகொள்ள வில்லை?, விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என யாராவது சொன்னார்கள்? பெண்களை கடத்தி பாலியல் பலத்காரம் செய்தீர்களா?, ஆபாச வீடியோ எடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் பென்டிரைவில் பதிவேற்றம் செய்தது யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தெரிவக்க பிரஜ்வல் ரேவண்ணா நேரத்தை கடத்தி வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை மதிக்காமல் மிரட்டி பலாத்காரம் செய்த பிரஜ்வலுக்கு பெண் சக்தியையும், அதிகாரத்தையும், உணர்த்தும் விதத்தில் பெண் அதிகாரிகளை வைத்தே அவரை கைது செய்துள்ளோம்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொல்லும் பதிலை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. கடந்த 4-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News